விழுப்புரத்தில் நடைபெற்ற தனியார் பள்ளியின் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் கிரிக்கெட் விளையாட்டு மட்டும்தான். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கிடைக்கக்கூடிய பணத்தை வைத்து தான் கல்லூரிக்கு பீஸ் கட்டினேன். சில நேரங்களில் சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த சட்டையுடன் கல்லூரிக்குச் சென்றேன். கடினமாக உழைத்தால் முன்னேற முடியும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம்.
உழைப்பு மட்டுமே உங்களை இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னால் சாதிக்க முடியும் என்றால் எல்லோரும் கட்டாயம் சாதிக்கலாம். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். கஷ்டப்படாமல் எதுவும் கிடைத்து விடாது. எந்த உயரத்திற்கு சென்றாலும் தன்னடக்கம் வேண்டும். n கடந்து வந்த பாதையை யாரும் மறந்து விடக்கூடாது. சொந்த ஊரில் மைதானம் அமைத்து அதில் இலவசமாக கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகின்றேன் என்று நடராஜன் உருக்கமாக பேசியுள்ளார்.
