சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் மூழ்கிக் கிடந்த அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஈரோட்டை சேர்ந்த ராகுல் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு பெரும் அடிக்கடி செல்போனில் பேசியும் இன்ஸ்டாகிராம் மூலமாக தகவல்களை பரிமாறியும் வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்த நிலையில் தனக்கு ஈரோடு என்று கூறிய ராகுல் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்தால் நேரில் சந்திக்கலாம் என்று அந்த மாணவியிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி அந்த மாணவி நேற்று முன்தினம் சென்னையிலிருந்து சேலத்திற்கு வந்த நிலையில் இரவு 9.45 மணி அளவில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இறங்கியவர் ராகுலை சந்தித்துள்ளார். ரயில் நிலையம் முன்புள்ள பேருந்து நிறுத்த பகுதிக்கு வந்ததும் தான் கழிவறைக்கு சென்று வருவதாக மாணவி ராகுலிடம் கூறியுள்ளார். அப்போது தன்னுடைய கைப்பையை ராகுலிடம் மாணவி கொடுத்துவிட்டு சென்றபோது கழிவறை சென்ற சமயத்தில் நகைகள் அணிந்து செல்லக்கூடாது அங்கு பாதுகாப்பு இருக்காது என்று ராகுல் கூறியதை நம்பி அந்த மாணவி தான் அணிந்திருந்த மூன்று பவுன் எடை கொண்ட மூன்று வளையல்கள், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை கழற்றி அந்த கைப்பையில் வைத்துள்ளார்.
மேலும் தன்னுடைய செல்போன் மற்றும் லேப்டாப்பையும் அந்த கைப்பையில் வைத்து ராகுலிடம் கொடுத்துவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். பிறகு சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது ராகுல் அந்த கைப்பையுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கதறி அழுதுள்ளார். ராகுலை தொடர்பு கொண்டும் அவரால் முடியவில்லை. பிறகு சம்பவம் குறித்து சென்னையில் உள்ள தன்னுடைய தந்தைக்கு மாணவி தகவல் தெரிவித்த நிலையில் கதறியபடி சேலம் வந்த அவர் சூலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ராகுலின் போட்டோவை வைத்து அவரை தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் காதலை நம்பி வந்து நகைகளை மாணவி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
