சென்னையில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சுபாஷ், பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் அவர் தவணை முறையில் பழைய கார் ஒன்றை வாங்கிய நிலையில், அதற்கான கடனை அடைக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக தனிநபர் கடன் பெற முயன்றபோது, ஆன்லைனில் வந்த ஒரு விளம்பரத்தை நம்பி மோசடி வலையில் சிக்கியுள்ளார்.
அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, மர்ம நபர் ஒருவர் “35 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் உடனடியாக 85 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்கும்” என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சுபாஷ், அவர் அனுப்பிய லிங்க் மூலம் பணத்தைச் செலுத்தியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் பணம் வராததோடு, அந்த நபரின் செல்போன் எண்ணும் அணைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த மாணவர், இச்சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பணத்தை இழந்ததற்காக பெற்றோர் அவரைக் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுபாஷ், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மோசடிகளால் இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் இத்தகைய துயரச் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
