தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் மிக முக்கிய அமைச்சரவைக் கூட்டங்கள், அரசு ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் உயர்மட்ட ஆலோசனைகளில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவர் பங்கேற்பது குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். இவர்கள் இருவரும் முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் தமிழக அரசில் என்ன அதிகாரப்பூர்வ பதவிகளை வகிக்கிறார்கள் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனாலும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறைக்கு அருகிலேயே இவர்களுக்குத் தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்கள் அரசு ஊழியர்கள் இல்லாத பட்சத்தில், ரகசிய ஆவணங்கள் மற்றும் முக்கியக் கொள்கை முடிவுகள் பரிமாறப்படும் மிக ரகசியமான அரசு கூட்டங்களில் இவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் கலந்து கொள்கிறார்கள் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். இத்தகைய நபர்களை அரசு நிர்வாகத்தில் ஈடுபடுத்துவது அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் அலுவல் விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உடனடியாக தலையிட்டு, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இரு நபர்களின் அதிகாரப்பூர்வ பதவிகளைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வில்சன் வலியுறுத்தியுள்ளார். அதோடு, எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொண்டு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள் என்பதைப் பொதுமக்களுக்கு அவர் விளக்க வேண்டும் என்றும் தனது பதிவில் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
