சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வணிகவியல் மாணவரான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மாக்ஸிமிலியன் என்பவர், அங்குள்ள பொது ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராவை எடுத்து நக்கிவிட்டு, மீண்டும் அதை அதே இடத்தில் வைத்துள்ளார். மேலும், இந்த அருவருப்பான செயலை வீடியோவாகப் பதிவு செய்து அவர் இணையத்திலும் பதிவிட்டுள்ளார். சுகாதாரப் பாதுகாப்புடன் தொடர்புடைய இந்த விவகாரம் பொதுமக்களிடையே கடுமையான கண்டனங்களை எழுப்பிய நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த இயந்திரத்தில் இருந்த அனைத்து ஸ்ட்ராக்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
இந்தத் தகாத செயலைத் தொடர்ந்து, அந்த மாணவர் மீது பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்தல் மற்றும் பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிங்கப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்குச் சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக 6 மாதச் சிறையும், சேதம் விளைவித்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அவருக்குக் கிடைக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
