தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமனதான முடிவின்படி இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தவெக வேட்பாளர்களுக்கு மதிமுக முழு ஆதரவை வழங்கும் என்றும், அழைப்பு விடுத்தால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் செயல்பாடுகள், குறிப்பாக லஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்த விதம் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக வைகோ பாராட்டியுள்ளார். திமுக கூட்டணியில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் மற்றும் அதிருப்திகள் காரணமாகவே மதிமுக இந்த அரசியல் முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இடைத்தேர்தல்களில் மதிமுக போட்டியிடப் போவதில்லை என்றும், தவெகவை முழுமையாக ஆதரிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதேநேரம், தேசிய அளவில் மதிமுக தொடர்ந்து ‘இந்தியா’ கூட்டணியிலேயே நீடிக்கும் என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
