அமித்ஷா சந்திப்பு ரத்து… காங்கிரஸ் தலைவர்களுடனும் மோதல்?… முதல்வர் விஜய்யின் டெல்லி பயணத்தில் நடந்த திடீர் திருப்பம்… கிளம்பிய புதுப்புயல்…!

By Nanthini on வைகாசி 28, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்காமலேயே சென்னை திரும்பியுள்ளார். தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், இன்று காலை 10 மணிக்கு நடக்கவிருந்த இந்த முக்கிய சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் திருப்பம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, கூட்டணி கட்சியினரிடையே மிகுந்த ஏமாற்றத்தையும் தந்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

முன்னதாக, முதல்வர் விஜய் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். பிரதமருடன் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த ஆலோசனையில், தமிழ்நாட்டின் சில முக்கிய தேவைகள் குறித்தான 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் வரை நீடித்த சந்திப்பில், தமிழ்நாட்டினுடைய நிதி தேவைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

   

அதே சமயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்திக்க முதலமைச்சர் திட்டமிட்டிருந்த நிலையில், அந்த சந்திப்பும் திடீரென ரத்து செய்யப்பட்டது. அசாம் மாநில பாதுகாப்பு பணிகள் மற்றும் இதர மாநில அவசர ஆலோசனைக் கூட்டங்கள் காரணமாக இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், அதே குறிப்பிட்ட நேரத்தில் கேரளாவின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசனை அமித் ஷா சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் வெளியானதால், முதல்வர் விஜய்க்கான அனுமதி முறைப்படி கோரப்படவில்லையா அல்லது அணுகியும் அனுமதி மறுக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

 

காங்கிரஸ் தேசிய தலைவர்களை முதல்வர் விஜய் சந்திப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை வரவேற்க டெல்லியில் வைக்கப்பட்ட பேனர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஆனால், இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த இரண்டு நாள் டெல்லி பயணத்தில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை மட்டுமே முதல்வர் விஜய் சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு அடுத்த வாரம் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.