தமிழ் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத ஒரு புதிய திருப்பத்தைக் கண்டுள்ளது. தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் ஆற்றிய ஒரு மணி நேரப் பதிலுரை, அரசியல் விமர்சகர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் உதயநிதி ஸ்டாலின் வரையிலான திமுகவின் அணுகுமுறைகளைச் சுட்டிக்காட்டி, தொண்டை கட்டும் அளவுக்கு அவர் ஆற்றிய இந்த ஆவேச உரை, தற்போது தவெக தொண்டர்களால் சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாக்கப்பட்டு வருகிறது.
தனது உரையின்போது சட்டம்-ஒழுங்கு மற்றும் சமூகப் பண்பாடு குறித்த மிக முக்கியமான கோரிக்கையை முதல்வர் முன்வைத்தார். “அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொள்ளலாம்; ஆனால், அதற்காகத் தனிப்பட்ட முறையில் நமது பெண்களைத் தரம் தாழ்ந்து பேசுவது ஏற்புடையதல்ல” என்று ஆணித்தரமாகக் கூறினார். அண்மைக்காலமாகத் தமிழகத்தில் ஆபாசமும் வன்மமும் நிறைந்த பேச்சுக்கள் நதிபோல ஓடிக்கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்த அவர், திரைத்துறையிலும் அரசியலிலும் மக்கள் தமக்கு அளித்த இடத்திற்குப் பெண்களே காரணம் என்பதால், அவர்களை அவமதிப்பவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும் என எச்சரித்தார்.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தச் சட்டசபையில் பெண் என்ற முறையில் சந்தித்த அவமானங்களைக் குறிப்பிட்ட விஜய், அதுபோன்ற ஒரு நிலை இனி எந்தவொரு பெண்ணுக்கும் வந்துவிடக் கூடாது என்பதில் தாம் மிகத் தெளிவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அரசியல் விமர்சனங்கள் எவ்வளவு காரசாரமாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் “எலும்பை உடைப்பேன்” என்றெல்லாம் அவைக்குள்ளேயே மிரட்டுவதுதான் அரசியலா என்று கேள்வி எழுப்பிய அவர், இதுபோன்ற பேச்சுகளால்தான் மக்கள் குறிப்பிட்ட கட்சியினரைத் தேர்தலில் தோற்கடித்தார்கள் என்ற உண்மையையும் சுட்டிக்காட்டினார்.
அரசியல் தலைவர்களின் சமீபத்திய பேச்சுகளைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக “நல்ல சாவே வராது” என்று திமுக மூத்த உறுப்பினர் கூறியதை வன்மையாகக் கண்டித்தார். 50, 60 ஆண்டுகளாக வாக்களித்த மக்களைப் பார்த்து இப்படிப் பேச எப்படி மனது வருகிறது என்றும், மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். பழம்பெரும் தலைவர்கள் ‘நாங்கள் பேசாத பேச்சா’ என இத நியாயப்படுத்துவதை விடுத்து, பழைய அரசியலில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
“நாங்கள் மிசாவைப் பார்த்தவர்கள் எனப் பழைய கதைகளையே பேசிக்கொண்டிருக்கக் கூடாது; இங்கு நடப்பவை அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று கூறி, காலை 9.35 மணிக்குத் தொடங்கிய தனது உரையை 10.35 மணி வரை தொடர்ந்து ஆற்றி நிறைவு செய்தார். நாகரிகமான அரசியலையும் பெண்களுக்கான பாதுகாப்பையும் வலியுறுத்தி முதல்வர் விஜய் ஆற்றிய இந்த காரசாரமான உரை, தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதத்தையும் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
