ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே பண்டிகை கால சிறப்பு மலை ரயில்கள் வரும் 25ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை இயக்கப்படுகிறது இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கிறிஸ்மஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஊட்டி – மேட்டுப்பாளையம், குன்னூர் – ஊட்டி – கேத்தி – ஊட்டி என சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 25, 27, 29, 31 மற்றும் ஜனவரி 2, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளில் காலை 9:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மதியம் 2:25 மணிக்கு ஊட்டியை வந்தடையும்.
மறு மார்க்கத்தில் 26, 28, 30 மற்றும் ஜனவரி 1, 3, 5, 16, 18, 24, 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11:25 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரயில் மாலை 4:20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். இதேபோல மேற்கண்ட நாட்களில் ஊட்டி – குன்னூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி ஊட்டியில் இருந்து மதியம் 2:50 மற்றும் மாலை 3:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் குன்னூர் செல்லும். மறு மார்க்கத்தில் குன்னூரில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 10:45 மணிக்கு ஊட்டி வந்தடையும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
