தமிழ் சினிமாவில் பலதுறை வித்தகர்கள் மிகவும் குறைவு. அப்படிப்பட்ட ஒரு அரிய ஆளுமைதான் சித்ரா லட்சுமணன். பத்திரிக்கையாளராக, மக்கள் தொடர்பாளராக, நடிகராக, இயக்குனராக மற்றும் தயாரிபபாளராக என பழம் தின்று கொட்டை போட்டவர் சித்ரா லட்சுமணன். தற்போது அவர் நடத்தி வரும் யுடியூப் சேனல் தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு சேனலாக உள்ளது.
சித்ரா லட்சுமணன் தனது வாழ்க்கை பயணத்தை பத்திரிக்கையாளராக தொடங்கினார். இதை தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜாவுடன் இணைந்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அவர் படங்களில் மக்கள் தொடர்பாளராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.
1984ல் வெளிவந்த மண் வாசனை படத்தின் மூலம் அவரைத் தயாரிப்பாளர் ஆக்கினார் பாரதிராஜா. அதற்கு முன்பாக ஜப்பானில் கல்யாண ராமன் திரைப்படத்தின் மூலமாக சித்ரா லட்சுமணன் ஒரு நகைச்சுவை நடிகராகவும் அறியப்பட்டார்.
இப்படி பல துறைகளில் கால்பதித்து வெற்றி பெற்ற சித்ரா லட்சுமணன் இயக்குனர் பொறுப்பையும் தொட்டுப் பார்க்க தவறவில்லை. 1988 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சூரசம்ஹாரம் படத்தின் இயக்குனர் சாட்சாத் நம் சித்ரா லட்சுமணன். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
அதன் பின்னர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து பிரபு நக்மா நடிப்பில் பெரியதம்பி என்ற படத்தை இயக்கினார். அந்தபடமும் பெரிய வெற்றிப்படம் இல்லை. ரசிகர்கள் அப்படி ஒரு படம் வந்ததையே இப்போது ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டார்கள். அதன் பின்னர் அடுத்த ஆண்டே கார்த்தி நடிப்பில் சின்ன ராஜா என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட்டானது. ஆனால் படம் பெரியளவில் ஓடவில்லை.
அதனால் தொடர்ந்து அவர் இயக்குனராக தன்னை வலிந்து கட்டாயப்படுத்திக் கொள்ளாமல் தனது பிற துறைப் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.