தொழில்நுட்ப உலகில் அசுர வளர்ச்சி பெற்று வரும் சீனா, தற்போது விண்வெளியில் சூரிய மின் நிலையம் அமைத்து, அங்கிருந்து வயர்லெஸ் (வயர் இல்லா) முறையில் பூமிக்கு மின்சாரத்தைக் கடத்தும் அதிநவீன ‘சன் சேசிங்’ (Sun Chasing) திட்டத்தில் மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. விளையாட்டு பொம்மைகள் முதல் அதிநவீன ஸ்மார்ட்போன்கள் வரை உலக சந்தையைத் தன் வசம் வைத்துள்ள சீனா, கடலின் மேல் பிரம்மாண்ட பாலங்கள் அமைப்பது மற்றும் செயற்கை சூரியனை உருவாக்குவது போன்ற வியத்தகு முயற்சிகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, விண்வெளி ஆற்றலை பூமியின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் இந்த தரைவழி சோதனையின் வெற்றி, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனையில், சீனா 75 மீட்டர் உயரமுள்ள ஒரு பிரம்மாண்ட கோபுரத்தைப் பயன்படுத்தியுள்ளது. அங்கிருந்தவாறு 4.8 மீட்டர் அளவுள்ள குவிமாட கண்ணாடி (Dome-shaped mirror) மூலம் சூரிய ஒளியை மிகத் துல்லியமாக ஈர்த்து, பின்னர் அதனை மைக்ரோவேவ் (Microwave) அலைகளாக மாற்றியுள்ளனர். இவ்வாறு மாற்றப்பட்ட ஆற்றலை, எந்தவொரு வயர் இணைப்பும் இல்லாமல் 100 மீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் முறையில் வெற்றிகரமாகக் கடத்தி சாதனை படைத்துள்ளனர். விண்வெளியில் இருந்து பூமிக்கு தடையில்லா பசுமை ஆற்றலைத் தரும் இந்தத் தொழில்நுட்பத்தின் ஆரம்பகட்ட வெற்றி, உலகளாவிய ஆற்றல் தேவையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
