தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், திமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனை தோற்கடித்துப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஸ்ரீநாத். நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மிக நெருங்கிய நண்பரான இவருக்கு, இந்தத் தேர்தல் வெற்றி மற்றும் கட்சிப் பணிகளுக்கான அங்கீகாரமாக தவெக அமைச்சரவையில் தற்போது இடம் கிடைத்துள்ளது.
முதலமைச்சரின் நம்பிக்கைக்குரியவரான ஸ்ரீநாத்திற்கு எந்தத் துறை ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதமாக மாறியுள்ளது. அவர் திரைத்துறை பின்னணி கொண்டவர் என்பதால் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அல்லது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்படலாம் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர். அதேநேரம், தென் தமிழகத்தில் கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் நோக்கில், அவருக்குப் பொதுப்பணித்துறை அல்லது வருவாய்த்துறை போன்ற முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
