நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும் நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம் நாடாளுமன்ற பேரணியாக உருவெடுத்த நிலையில், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், போராட்டத்தின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழகத்திலும் இதன் தாக்கம் பலமாக எதிரொலித்து வருகிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். சென்னை எழும்பூர், கோவை, மதுரை என மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் அமைதியான முறையில் பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை திருவொற்றியூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறையினர் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளை போலீசார் கொடூரமாக அடித்து, தரதரவென இழுத்துச் சென்று கைது செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களிடையேயும் அரசியல் தலைவர்களிடையேயும் கடும் கண்டனங்களைச் குவித்து வருகிறது.
இத்தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட மாணவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வரும் நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
