“தம்பின்னு சொல்லி இப்படியொரு கொடூரமா?”…. 200 போலீஸ் குடும்பங்களை அலறவைத்த பெண் இன்ஸ்பெக்டர்…. ரூ.20 கோடி தங்கக் காசு மோசடியில் சிக்கிய ஷீலா மேரி….!

By Nanthini on ஆடி 22, 2026

Spread the love

சென்னையில் குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினரின் குடும்பத்தினரிடம் சுமார் ரூ. 20 கோடி வரை மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் வடசென்னை காவல் சரகத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய ஷீலா மேரி, அவரது கூட்டாளி பிரபுமணி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை நகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

இந்த மோசடியின் பின்னணியை ஆராய்ந்தபோது, கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி என்பவருடன் இணைந்து ஷீலா மேரி திட்டமிட்டு இச்சதியை அரங்கேற்றியது தெரியவந்தது. “ரூ. 4,500 முதலீடு செய்தால் 15 நாட்களில் ஒரு கிராம் தங்கக் காசு வழங்கப்படும்” என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து, பிரபுமணியை தனது “சொந்தத் தம்பி” என சக போலீசாரிடமும், அவர்களுக்குத் தெரிந்தவர்களிடமும் ஷீலா மேரி அறிமுகப்படுத்தியுள்ளார். இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள ஒருவரே நேரில் பரிந்துரை செய்ததால், அதை நம்பி ஏராளமான காவல் குடும்பத்தினர் போட்டி போட்டுக்கொண்டு லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர்.

   

ஆரம்பத்தில் சிலருக்குச் சொன்னபடி தங்கக் காசுகளை வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்திய பிரபுமணி, கொளத்தூரில் தனியாக அலுவலகம் திறந்து ஆட்களையும் நியமித்தார். முதலீடாக வந்த கோடிக்கணக்கான ரூபாயில் ஒரு பகுதியை ஷீலா மேரிக்கு பங்காக வழங்கி வந்துள்ளார். ஆனால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை திடீரெனக் கடுமையாக உயர்ந்ததால், பிரபுமணியால் வாக்குறுதி அளித்தபடி தங்கக் காசுகளைக் கொடுக்க முடியாமல் போனது. ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, ஷீலா மேரி தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி அவர்களை மிரட்டியும், புகார்கள் கமிஷனர் அலுவலகத்திற்குச் செல்லாதவாறு தடுத்தும் வந்துள்ளார்.

   

தற்போது, சிறையில் உள்ள ஷீலா மேரி உள்ளிட்ட 3 பேரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் வடசென்னையில் பணியாற்றிய மற்றொரு ஆண் இன்ஸ்பெக்டர் மற்றும் ரயில்வே போலீசில் பணியாற்றும் அவரது மனைவிக்கும் இதில் நேரடித் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவலில் எடுக்கப்பட்டுள்ள ஷீலா மேரியிடம் நடத்தப்படும் இந்தத் தொடர் விசாரணையில், மேலும் பல முக்கியப் புள்ளிகள் மற்றும் பகீர் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.