தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி, ஹீரோக்களாக உச்சத்தில் இந்த காலகட்டத்தில், காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சந்திரபாபு. எம்ஜிஆர் சிவாஜி, படங்களில் அவர் காமெடி காட்சியில் நடிக்க வாய்ப்பு வரும்போது, எம்ஜிஆர் சிவாஜி வாங்குகிற சம்பளத்தை விட எனக்கு ஒரு ரூபாய் சம்பளம் கூடுதலாக சம்பளம் தந்தால்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடித்து, அந்த சம்பளத்தில் நடித்தவர்.
அந்த காலத்தில், சினிமா நடிகர்களில் அதிக ஷோக்கு பேர்வழியாக இருந்த ஒரே நடிகர் இவர்தான். எப்போதும் விலை உயர்ந்த காரில் பவனி வருவதும், செம ரிச் ஆக டிரஸ் அணிவதும், வெளிநாட்டு சிகரட் டின், காஸ்ட்லி சென்ட், பர்ப்யூம் என, அவரது வாழ்க்கை ஸ்டைலே, பாரினர் ஸ்டைலில்தான் இருந்திருக்கிறது.

அப்படிப்பட்ட நடிகர் சந்திரபாபு ஷீலா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. இதுகுறித்து சந்திரபாபுவின் சகோதரர் ஜவஹர் ஒரு நேர்காணலில் கூறியதாவது. சந்திரபாபு, ஷீலா திருமணம் நடந்த சில தினங்களில், சந்திரபாபு வெளியில் செல்கிறார். அவர் சென்ற சிறிது நேரத்தில் ஷீலாவும் புறப்பட்டுச் செல்கிறார். இரவு 8 மணியளவில் சந்திரபாபு வந்துவிடுகிறார். ஆனால் ஷீலா வரவில்லை.
சந்திரபாபு ஷீலா குறித்து கேட்கிறார். வெளியில் சென்றவர் வரவில்லை என்று கூறுகிறோம். 9 மணி, 10 மணி, 11 மணி என நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. யாரும் சாப்பிடவில்லை. ஹாலில் அனைவரும் அமர்ந்திருக்கிறோம். ஷோபாவில் அமர்ந்தபடி சந்திரபாபுவும் விழித்திருக்கிறார். 12 மணி, 1 மணி என கடந்து இரவு 2 மணிக்கு கதவு தட்டப்படுகிறது. கதவை திறந்தால், ஷீலா நிற்கிறார். வீட்டுக்குள் வந்த அவர், படுக்கையறைக்குள் சென்று உடையை மாற்றி விட்டு வருகிறார்.

ஷோபாவுக்கு அருகில் இருந்த ஒரு கடிதத்தை எடுத்து காட்டுகிறார். கோபமாக இருந்த சந்திரபாபு, நான் அதை படிக்கவில்லை என்கிறார். அப்போது ஷீலா, நான் ஒருவரை காதலித்தேன். அவர் சொல்லி, அவரது ஆள் ஒருவர் என்னை அழைத்துப் போக வந்திருந்தார். அங்குதான் போயிருந்தேன். திருவனந்தபுரம் போய் அங்கிருந்து லண்டன் போவதாக தான் அந்த கடிதத்தில் எழுதியிருந்தேன்.
என்னை மன்னித்து விடுங்கள். நான் அங்கு சென்ற போது, என்னிடம் பணம், நகைகள் எல்லாம் எங்கே என்று கேட்டார்கள். நான், உடுத்திய ஆடையுடன் வந்திருக்கிறேன். பணம், நகைகள் எல்லாம் அவருக்கு சொந்தமானது. அதை எப்படி எடுத்துவர முடியும் என்று கேட்டேன். பணம், நகைகள் இல்லாவிட்டால் வரவேண்டாம் என திருப்பி அனுப்பி விட்டார்கள். என்னை மன்னித்து விடுங்கள்.

ஏற்றுக்கொள்ளுங்கள் என கதறினார். ஆனால் அவரை ஏற்க மறுத்த சந்திரபாபு, பீரோவில் இருக்கிற நகைகள், பணம் எல்லாவற்றையும் மொத்தமாக எடுத்துக்கொண்டு போய் விடு. நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய். அதை என்னால் ஏற்கவே முடியாது. நீ போகிற போது அந்த பணம், நகைகள் எனக்கு பெரிது இல்லை என, மனைவியை அனுப்பி விட்டார். மறுநாள் காலை எம்ஜிஆர், சிவாஜி, பிஆர் பந்துலு, சீனிவாசன் என எல்லோருக்கும் போன் போட்டு வீட்டுக்கு அழைத்து நடந்த சம்பவத்தை எல்லாம் சொல்லி விட்டார். அதனால்தான் இந்த விஷயம் மற்றவர்களுக்கு தெரிந்தது என கூறியிருக்கிறார் அவரது சகோதரர்.
