மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளில் அதிரடி திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மருந்துகளின் பிரிவிலிருந்து ‘சிரப்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, கடுமையான ஒழுங்குமுறை மேற்பார்வை விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இனி இருமல் சிரப்கள் உள்ளிட்ட சில வாய்வழி திரவ மருந்துகளை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கலப்பட இருமல் மருந்து உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற விசாரணையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நச்சுப் பொருட்கள் கலப்பதைத் தடுக்க, மருந்து விநியோக நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டு, உரிமம் இல்லாத கடைகளில் கிடைப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை வழங்கக்கூடாது என NFI 2026 வரைவின்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
