வருட இறுதி என்றாலே இந்த வருடத்தில் என்னவெல்லாம் நமக்கு நடந்தது என்பதை நாம் அனைவரும் நினைவு கூறுவோம். இந்த வருடத்தில் நடந்த சந்தோஷமான விஷயங்கள், துக்க விஷயங்கள் என அனைத்தும் நம் எண்ணத்திற்கு வந்து போகும். அந்த வகையில் இந்த வருடத்தில் நம்மை விட்டு பிரிந்து, நம்மை சோகத்தில் ஆழ்த்திய திரை பிரபலங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
1. நடிகர் டிபி கஜேந்திரன்:
பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான டிபி கஜேந்திரன் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன் என பல ஹிட் திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரை வாழ்க்கையில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணசேத்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு பிப்ரவரி 5ல் காலமானார்.

2.பாடகி வாணி ஜெயராம்:
தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பிரபல பின்னணி பாடகி ஆக வலம் வந்தவர் பாடகி வாணி ஜெயராம். இவர் தனது 78வது வயதில் வீட்டில் தவறவிழந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் இந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

3.நடிகர் மயில்சாமி:
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மயில்சாமி. மக்கள் மத்தியில் தனது காமெடியின் மூலம் ஒரு தனி இடத்தை பிடித்தவர். தீவிர சிவ பக்தன் ஆன இவர் சிவராத்திரி அன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது உதவும் குணம் பற்றி நமக்கு சொல்ல சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு அனைவருக்கும் உதவக் கூடியவர். இவரது இழப்பு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

4.நடிகர் மனோபாலா:
தமிழ் சினிமாவின் பல முன்னணி இயக்குனர்களோடு பணியாற்றியவர் நடிகர் மனோபாலா. இவர் திரைப்படங்களை இயக்கியதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் நடித்துள்ளார். ஒல்லியான தோற்றமும், எதார்த்தமான உடல் மொழியும் இவரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. 69 வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

5.நடிகர் மாரிமுத்து:
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களில் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் எதிர்நீச்சல் சீரியல் டப்பிங்கின் போது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார் இவரின் மறைவை தற்போது வரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

6. நடிகர் போண்டாமணி :
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் போண்டாமணி. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் கால் பதித்து தனது திறமையான நடிப்பால் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர். இவர் சுந்தரா ட்ராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா போன்ற பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடத்தில் கலக்கினார். 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர் சிறுநீரக பிரச்சனையால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்த வருடத்தின் டிசம்பர் 24 தேதி அன்று இயற்கை எய்தினார்.

7.நடிகர் விஜயகாந்த்:
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும் ,அரசியல் தலைவராகவும், மாமனிதராகவும் வாழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரது மறைவு தற்போது தமிழ்நாட்டையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. உடல் நலக்குறைவால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த இவர் சமீபத்தில் இந்த வருடம் டிசம்பர் 28ஆம் தேதி அன்று நம்மை விட்டு பிரிந்தார்.

