தமிழகத்தில் மீண்டும் ஜாதி விவகாரத்தால் ஒரு சாதிய படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து (29) என்பவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து வரும் இடையில் நேற்று காலை சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் காந்திநகர் பகுதிக்கு வந்து சாதி பெயரை சொல்லி அங்கிருந்தவர்களை மிகவும் இழிவாக பேசியுள்ளார்.
அப்போது அங்கிருந்து சுடலை முத்து அதனை தட்டி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆத்திரத்தில் இருந்த சுந்தர் மற்றொரு நபருடன் திரும்பி வந்து காந்திநகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த சுடலை முத்துவை சரமாரியாக அறிவாளால் வெட்டியுள்ளார். உயிருக்கு பயந்து ஓடிய சுடலை முத்து என்பவரை சுந்தர் மற்றும் அவருடன் வந்த நபரும் சாதி பெயரை சொல்லி ஓட ஓட வெட்டி படுகொலை செய்துள்ளனர். எனது இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுடலைமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகிறார்கள். பட்டப் பகலில் இளைஞரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
