இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், டெல் அவிவ் நகரின் மீது அணு குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு தீப்பிழம்புகளும் புகையும் சூழ்ந்திருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை அடைந்துவிட்டால் இஸ்ரேலின் இருப்புக்கே பேராபத்து ஏற்படும் என்றும், இத்தகைய மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதே தற்போதைய முதன்மை நோக்கம் என்றும் எழுத்தாளர் யுவால் புளம்பெர்க்கின் கருத்துகளுடன் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலத்தில் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளை இஸ்ரேல் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். அடுத்ததாக யார் அதிபராக வருவார்கள் என்று கணிக்க முடியாது என்பதால், டிரம்பின் ஆட்சிக் காலத்திற்குள்ளாகவே ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை முடித்து, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசின் அனைத்து வளங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் நெதன்யாகு வெளியிட்ட இந்தப் பதிவு பெரும் அரசியல் சர்ச்சையையும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களிடையே தேவையற்ற பயத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் பெற நெதன்யாகு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. ஒரு நாட்டின் பிரதமரே இத்தகைய ஆபத்தான போலி காட்சிகளைப் பரப்புவது கவலைக்குரியது என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
