நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் சுமார் ரூ. 634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபி-க்கு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த விவரங்களின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்யுமாறு முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
தனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரி திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த விசாரணையின் போது, முந்தைய மனுவை தற்போதைய அரசு திரும்பப் பெற முடியாது என நேரு தரப்பு வாதிட்ட நிலையில், நோட்டீஸ் அனுப்பியும் பதிலளிக்காமல் கால அவகாசம் கோருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி அமர்வு இருதரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்தச் சூழலில், கே.என். நேரு தாக்கல் செய்த மறுஆய்வு மனு மீதான இறுதித் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்க உள்ளதால், அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
