தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நியோ மேக்ஸ்’ நிதி நிறுவன மோசடி வழக்கின் தொடர்ச்சியாக, அதன் முன்னாள் பங்குதாரர் கடத்தப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சார்லஸ் (56) என்பவர், கடந்த ஜூன் 27-ஆம் தேதி தனது ஓட்டுநருடன் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூர் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் காரில் காத்திருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை காரோடு கடத்திச் சென்றுள்ளனர். ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் தாழம்பூர் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
போலீஸார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு கடத்தல் கும்பல் சார்லஸை அவரது காரிலேயே கடத்திச் சென்றது உறுதியானது. கடத்தல்காரர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஒரு கார் தென்காசியை நோக்கியும், மற்றொரு கார் கோவை நோக்கியும் பயணித்ததை போலீஸார் கண்டறிந்தனர். தனிப்படை அமைத்துத் தேடிய போலீஸார், தென்காசியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சார்லஸை பத்திரமாக மீட்டனர். அங்கிருந்த தினேஷ் பாண்டின் என்பவரை உடனடியாகக் கைது செய்தனர்.
கைதான தினேஷ் பாண்டின் கொடுத்த தகவலின் அடிப்படையில், கோவையில் பதுங்கியிருந்த கருத்தபாண்டி, ராமநாதபுரத்திற்குத் தப்பி ஓடிய தினேஷ்குமார் மற்றும் வேல் சபரி ஆகிய மேலும் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த விசாரணையில், இக்கும்பல் கடந்த 7 மாதங்களுக்கு முன்பே சார்லஸை மிரட்டி ரூ.1.40 கோடி பறித்ததும், அதுகுறித்து சார்லஸ் பயந்துபோய் போலீசில் புகார் அளிக்காததால், தற்போது துணிச்சலாக ரூ.2 கோடி கேட்டு மீண்டும் அவரை கடத்தியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கார்களும், சார்லஸின் காரும் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘நியோ மேக்ஸ்’ நிறுவனம், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து 3 மடங்கு லாபம் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் சுமார் 60,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் ரூ.8,000 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது இந்நிறுவனம் முடங்கியுள்ள நிலையில், இதன் நிர்வாகிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த பண மோசடிப் பின்னணியே இந்த கடத்தல் சம்பவத்திற்கும் முக்கியக் காரணம் என்று போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
