காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என காசாவின் சிவில் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களால் இக்கட்டிடத்தின் பலம் முற்றிலும் குலைந்திருந்தது. எனினும், காசாவில் நிலவும் கடுமையான தங்குமிடம் மற்றும் கூடாரப் பற்றாக்குறை காரணமாக, வேறு வழியின்றி ஆபத்தான நிலையிலும் மக்கள் அதில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அடிப்படை மீட்புக் கருவிகள் மட்டுமே உள்ள சூழலில், எகிப்திய கொடிகள் ஏந்திய எக்ஸ்கவேட்டர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவின் பெரும்பான்மையான கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அங்குள்ள சுமார் 2,000 கட்டிடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக மீட்பு இயந்திரங்களை காசாவிற்குள் அனுமதிக்காததே மீட்புப் பணிகள் தாமதமாவதற்குக் காரணம் என உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேவேளையில், பாதுகாப்பற்ற இடிபாடுகளில் மக்கள் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.
