குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக 39 வயது பெண் நேஹா கோகில் என்பவரைப் போலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நேஹாவின் மகனும், அந்தச் சிறுமியும் ஒரே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நேரம் பார்த்து, தனது மகனுடன் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார் நேஹா. அங்கே சுமார் 30 நிமிடங்கள் அச்சிறுமியைப் பார்த்து, “நீ உண்மையிலேயே என் மகனைக் காதலித்தால் செத்துப் போடி! உங்கள் காதலால் என் குடும்ப மானமே போகிறது” எனக் கடுமையாக மிரட்டி மானபங்கம் செய்துள்ளார்.
இதைக் கேட்டு கடும் மன உளைச்சலுக்கும் சமூக அவமானத்திற்கும் ஆளான அந்தச் சிறுமி, தனது தம்பியைப் பால் வாங்க வெளியே அனுப்பிவிட்டு, வீட்டில் பிளாஸ்டிக் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவான ஆடியோ ஆதாரங்களை ஆய்வு செய்த சர்க்கேஜ் காவல் துறையினர், சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக நேஹா கோகிலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
