திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி லட்சுமி, கணவரைப் பிரிந்து கள்ளக்காதலன் மதிவாணன் என்பவருடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு யார் தந்தை என்பதில் ஏற்பட்ட சந்தேகத்தாலும், குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும் குழந்தையை வளர்ப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் மனமுடைந்த தாய் லட்சுமி, தனது பச்சிளம் பெண் குழந்தையின் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்தபிறகு என்ன செய்வதென்று அறியாமல் தவித்த லட்சுமி, குழந்தையின் உடலை ஒரு கட்டைப் பையில் வைத்துக்கொண்டு பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளதுடன், பின்னர் ஐநூறு ரூபாய் கூலி பேசி இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து ஆற்றங்கரையில் புதைக்கச் செய்துள்ளார். இதற்கிடையில், குழந்தை எங்கே என்று கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் எழுப்பிய தொடர் கேள்விகளால் லட்சுமியின் முரணான பதில்கள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லட்சுமி குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அதிகாரிகள் ஆற்றில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட பிரேத பரிசோதனையில் குழந்தை கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, போலீசார் லட்சுமியை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதால், அவர் தற்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் பச்சிளம் குழந்தை தாயாலேயே கொல்லப்பட்ட இந்த கோரச் சம்பவம் ஆரணி மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
