உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், இருவீட்டாரும் ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மணமகனின் தம்பி, மணப்பெண்ணின் சேலை தலைப்பை பிடித்து இழுத்து வரம்பு மீறியுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த மணமகள், இச்சம்பவம் குறித்து தனது தாய்மாமாவிடம் கூறவே, இருவீட்டாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்து, அது போதையில் இருந்த உறவினர்களிடையே பெரிய கைக்கலப்பாக மாறியது.
இந்தக் கலவரத்தில் மணமகனின் மண்டை உடைந்து ரத்தம் சொட்டியதை அடுத்து, கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற மணப்பெண் இந்தத் திருமணமே வேண்டாம் எனத் திட்டவட்டமாக மறுத்தார். நிலைமை கைமீறிச் செல்லவே இருதரப்பினரும் காவல் நிலையத்தை தஞ்சமடைந்தனர்; அங்குப் போலிஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்ததைத் தொடர்ந்து, காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, அன்றைய தினமே மாலையில் திட்டமிட்டபடி திருமணம் இனிதே முடிந்தது.
