கன்னியாகுமரி மாவட்டம் மொட்ட விளைப் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அதே பகுதியை சேர்ந்த கீதா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் பன்னீர்செல்வம் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கீதா தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே கீதா வீட்டில் படுக்கையறையில் உள்ள ஜன்னலில் கதவுகள் பொருத்தப்படாமல் இருந்துள்ளது.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த 50 வயதான கொத்தனார் வேலை பார்க்கும் தர்மலிங்கம் என்பவர் ஜன்னல் வழியாக கீதா மற்றும் அவருடைய மகள் உறங்கும்போது அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இளம் பெண் வெளியே செல்லும்போது ஆபாச செய்கைகளை காட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் கதவு இல்லாத ஜன்னலை இரும்பு சீட் வைத்து மறைத்த இளம் பெண் தர்மலிங்கம் செய்யும் அநாகரிக செயல் குறித்து ஊர்காரர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இளம்பெண் வீட்டின் ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு சீட்டுகளை சுத்தியலால் நெம்பி துளையிட்ட தர்மலிங்கம் மீண்டும் செல்போனில் படுக்கையறை காட்சிகளை படம்பிடித்து உள்ளார். இதனை கவனித்த இளம் பெண் சத்தம் போட்ட நிலையில் தர்மலிங்கம் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து இளம் பெண் தர்மலிங்கம் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த செல்போனையும் பறிமுதல் செய்து அதிலிருந்து வீடியோக்களை அகற்றினர். தனியாக இருந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கொத்தனார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
