பிரேசில் நாட்டைச் சேர்ந்த 49 வயதான கொத்தனார் எடிமர் மார்ட்டின்ஸ், தாயின் மறைவுக்குப் பிறகு கடும் தனிமையில் வாடி வந்தார். இந்தச் சூழலில், பேஸ்புக்கில் 3 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட ஒரு பெண் ஐடியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த பதிவுகளைப் பகிர்ந்து வந்த அந்தப் பக்கம் உண்மையான பெண் ஒருவரால் நடத்தப்படுவதாக நம்பி, அவருடன் எடிமர் நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளார். நாளடைவில் அந்தப் பெண், “என்னோடு வந்து விடுகிறீர்களா? உங்களுக்கு தங்கும் இடம் மற்றும் அனைத்து உதவிகளையும் செய்கிறேன்” என்று அழைப்பு விடுத்ததை எடிமர் முழுமையாக நம்பியுள்ளார்.
தனது வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்கப் போவதாக மகிழ்ச்சி அடைந்த எடிமர், இருந்த சொத்துகள் அனைத்தையும் விற்றுவிட்டு, அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்காக சுமார் 1,600 கிலோ மீட்டருக்கு மேல் பேருந்தில் பயணித்து பெலொ ஹோரிசோண்டே நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு பல இடங்களில் தேடியும், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த அவர், உள்ளூர் ரேடியோ ஸ்டேஷனை அணுகி தனது சோகக் கதையை விவரித்துள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், எடிமர் நம்பிய அந்தப் பெண் நிஜத்தில் இல்லையென்றும், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் மற்றும் கணக்கு என்பதும் தெரியவந்தது. வேறொரு நபர் ஏமாற்றும் நோக்கத்துடன் இந்த போலி கணக்கைப் பராமரித்து வந்துள்ளார். இத்தனை நாளும் ஒரு ஏஐ உருவத்தை நம்பிப் பேசி வந்ததை அறிந்த எடிமருக்கு, இந்தச் செய்தி இதயத்தையே நொறுக்கும் அளவுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சொத்துகள் அனைத்தையும் இழந்து பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினாலும், எடிமரின் மன உறுதி குறையவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு ஏமாற்றம் மிஞ்சினாலும் பரவாயில்லை, எனது வாழ்க்கைத் துணையைத் கண்டுபிடிக்கும் முயற்சியை நான் கைவிடமாட்டேன். அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், அதே ஊரில் ஒரு உண்மையான பெண்ணைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். ஏஐ மாயையைக் காதலாக நம்பி ஏமாந்த இவரது சோகக் கதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
