மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர், தனது காதலனான ராமு குர்ஜர் என்பவரை நம்பி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மே 28 அன்று அந்த மாணவியை குவாலியருக்கு அழைத்துச் சென்ற காதலன், அவனது நண்பர்களான அருண் மற்றும் கௌரவ் ஆகியோருடன் சேர்ந்து குப்தேஸ்வர் மலைப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த இடத்தில் வைத்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், அந்த சிறுமியை மற்றொரு நபருக்கு 50,000 ரூபாய்க்கு விற்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தன்னை விற்கப்போகும் விபரத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று அழுதுகொண்டே எதிர்த்துள்ளார். இதனால் தங்களின் சதி வெளிப்பட்டுவிடும் என்று பயந்த காதலனும் அவனது நண்பர்களும், அந்த மாணவியின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். கொலைக்குப் பிறகு அங்கிருந்து தப்பிய அவர்கள், மறுநாள் மீண்டும் குற்ற இடத்திற்கு வந்து, சடலத்தை அடையாளம் காண முடியாதபடி பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளனர்.
இதற்கிடையில், மகளைக் காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் காதலன் ராமுவை பிடித்து விசாரித்தபோது, அவன் செய்த கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டான். தற்போது போலீஸார் மூன்று குற்றவாளிகளையும் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். படிப்பு தங்களின் மகளின் எதிர்காலத்தை மாற்றும் என்று நம்பியிருந்த பெற்றோர், இந்த கொடூரச் சம்பவத்தால் நிலைகுலைந்து போயுள்ளனர்.
