சிங்கப்பூரில் காதலி தனக்குத் துரோகம் செய்ததாகக் கூறி, 40 வயது நபர் ஒருவர் சாட்ஜிபிடி உதவியுடன் காதலியின் அந்தரங்க வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை அவரது பணி இடத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிப் பழிவாங்கிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேட்டிங் செயலி மூலம் பழகி ஒரே வீட்டில் வசித்து வந்த இந்த ஜோடியில், பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி காதலனுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து இருவரும் வாக்குவாதம் செய்தபோது, பெண் அதை ஒப்புக்கொண்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், சாட்ஜிபிடியைப் பயன்படுத்திப் பள்ளியில் நிர்வாக ஊழியராகப் பணிபுரியும் காதலியின் சக ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திரட்டியுள்ளார்.
பின்னர், பள்ளியின் அலுவலக இன்பாக்ஸுக்குக் காதலியின் அந்தரங்கச் செயல்களில் ஈடுபடும் 39 வினாடி காணொளியையும், ஒப்புதல் வாக்குமூல ஆடியோவையும் இணைத்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு நீதிமன்றம் 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்ததோடு, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக 1,500 சிங்கப்பூர் டாலர் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
