தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் குட்டிக் கதை ஒன்றைக் கூறி விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், திமுகவினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் இதற்கு மிகக் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் காரசாரமான விவாதங்களும், போஸ்ட்களும் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், பிரபல நடிகரும் திமுக பிரமுகருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இது குறித்து ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் விஜய்யின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் அதே வேளையில், திமுக தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். “அவர் ஆயிரம் பேசட்டும், அதுதான் அவருக்கு தெரிந்த நாகரீகம்” என்று முதலமைச்சரின் பேச்சுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், அரசியல் நாகரீகத்தைக் காக்கும் பொருட்டு தனது கட்சியின் தோழர்களுக்கு அறிவுறுத்தியுள்ள போஸ் வெங்கட், “நமது தோழர்கள் அவரது மகன், மகள் போட்டோவையோ குடும்பத்தார் போட்டோவையோ பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பாவம் அவர் செய்யும் தவறுக்கு பிள்ளைகள் என்ன பண்ணும்? அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் ரீதியான மோதல்களில் குடும்பத்தினரையும், குழந்தைகளையும் இழுக்கக் கூடாது என்ற போஸ் வெங்கட்டின் இந்த முதிர்ச்சியான பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.
