பேய் பங்களாவுக்கு ஆட்கள் தேவை! நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்த ஆவி ஆராய்ச்சியாளர்? பகீர் கிளப்பும் ஒரு திகில் சம்பவம்

By Arun

Published on:

ஹாலிவுட் திரைப்படங்களில் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் பங்களாவில் குடியேறி பேய்களிடம் கடி வாங்கும் பல திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல் நிஜமாகவே ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுவும் திரும்ப திரும்ப அந்த பங்களாவில் வந்து குடியேறி பேயிடம் சகவாசம் வைத்துகொண்டு அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள்.

இங்கிலாந்து நாட்டில் போர்லே என்ற ஊரில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமையான ஒரு தேவாலயம். அந்த தேவாலயத்திற்குச் சொந்தமாக அதன் அருகிலேயே ஒரு பங்களா இருக்கிறது. அந்த தேவாலயத்திற்கு பாதிரியாராக நியமிக்கப்படுபவர்கள் அவர்களின் குடும்பத்தோடு அந்த பங்களாவில்தான் தங்குவார்கள்.

   

முதலில் அந்த கட்டடம் ஒரு கல் கட்டடமாகத்தான் இருந்தது. 1875 ஆம் ஆண்டு போர்லே சர்ச்சுக்கு பாதிரியாக வந்த ஹென்ரி புல், அந்த கல் கட்டடத்தை இரண்டு அடுக்கு பங்களாவாக மாற்றினார். தனது மகன் மற்றும் மகள்களுடன் அந்த பங்களாவில் வசித்து வந்தார்.

ஒரு நாள் பங்களாவில் இரவு விருந்து நடந்துகொண்டிருந்தபோது திடீரென அந்த அறையின் ஜன்னலுக்கு வெளியே ஒரு இளம்பெண்ணின் உருவம் தெரிந்தது. ஹென்ரி புல்லின் குடும்பத்தினர் நடுங்கிப்போயினர். அதனை தொடர்ந்து அந்த பங்களாவின் பல இடங்களில் அந்த இளம்பெண்ணின் உருவம் தெரிந்தது. அது ஒரு கன்னியாஸ்திரியின் ஆவி என்று தெரியவந்தது.

1892 ஆம் ஆண்டு ஹென்ரி புல் இறந்துபோக, அவரது மகன் ஹாரி புல் அந்த தேவாலயத்திற்கு பாதிரியாராக நியமிக்கப்பட்டார். அந்த சமயங்களில் திடீரென அந்த வீட்டின் மேல் கற்கள் விழும் சத்தம் கேட்கும், வெளியே பார்த்தால் யாரும் இருக்கமாட்டார்கள். படிகட்டுகளில் யாரோ ஓடும் சத்தம் கேட்கும், வீட்டிற்குள் இருக்கும் பொருட்கள் எல்லாம் தானாக பறந்து போய் உடையும். இவ்வாறு ஒரு வீட்டிற்குள் ஆவி இருந்தால் என்னன்னவெல்லாம் நடக்குமோ அது எல்லாம் நடந்தது.

எனினும் அந்த கன்னியாஸ்திரி ஆவியின் அட்டகாசங்களை சகித்துக்கொண்டு அந்த வீட்டில் ஹாரி புல்லின் குடும்பம் தங்கி வந்தது. ஒரு நாள் ஹாரி புல்லின் சகோதரிகள் அந்த வீட்டின் தோட்டத்தில் அந்த கன்னியாஸ்திரியின் ஆவி நடந்து செல்வதை பார்த்திருக்கிறார்கள். அந்த ஆவியிடம் போய் பேச முயன்றபோது திடீரென மறைந்துவிட்டதாம்.

1927 ஆம் ஆண்டு ஹாரி புல் இறந்துபோக, அதன் பின் அந்த தேவாலயத்திற்கு எரிக் ஸ்மித் என்ற பாதிரியார் நியமிக்கப்பட்டார். அந்த பங்களாவில் கன்னியாஸ்திரி ஆவியின் அட்டகாசங்கள் இருக்கிறது என்று தெரிந்தும் அந்த பங்களாவில் அவர் தனது குடும்பத்துடன் வசித்தார். வழக்கம் போல் அந்த கன்னியாஸ்திரியின் ஆவி வேலையை காட்ட, 1929 ஆம் ஆண்டு டெய்லி மிரர் பத்திரிக்கையின் உதவியை நாடினார் எரிக் ஸ்மித்.

அந்த பத்திரிக்கையில் போர்லே பங்களா குறித்த செய்தி முதன்முதலில் வெளியானது. அவ்வாறுதான் டெய்லி மிரர் பத்திரிக்கை நிர்வாகத்தினர் அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த ஹாரி பிரைஸ் என்ற ஆவி ஆராய்ச்சியாளரை வரவழைத்தனர்.

ஹாரி பிரைஸ் அந்த வீட்டிற்குள் ஆய்வு செய்து, சந்திரமுகி சாமியார் போல், “இருக்கு இந்த வீட்டுல பிரச்சனை இருக்கு” என சொல்ல அந்த போர்லே பங்களா மிகவும் பிரபலமாக ஆனது. அதன் பின் எரிக் ஸ்மித் அந்த வீட்டில் இருந்து வெளியேற ஃபோய்ஸ்டர் என்பவர் புதிய பாதிரியாராக அந்த வீட்டிற்குள் நுழைந்தார். அவரின் குடும்பத்தை அந்த ஆவி படுத்தியபாட்டில் விழி பிதுங்கி போயினர்.

அதுவுமில்லாமல் அந்த கன்னியாஸ்திரி ஆவி, அந்த வீட்டின் சுவர்களில் எதையோ கிறுக்கத் தொடங்கியது. அந்த கிறுக்கல் அவர்களுக்கு புரியவே இல்லை. “போதும்டா சாமி, ஆளை விடுங்க” என்று ஃபோய்ஸ்டர் குடும்பம் அந்த பங்களாவை விட்டு வெளியேறியது. அதன் பின் ஆவி ஆராய்ச்சியாளரான ஹாரி பிரைஸ் அந்த பங்களாவை குத்தகைக்கு எடுத்து அந்த வீட்டில் ஆராய்ச்சியை தொடங்கினார்.

Harry Price

அப்போதுதான் அவர் பத்திரிக்கைகளில், “ஆவியை ஆராய்ச்சி செய்ய மனதிடமான, உயிருக்கு பயப்படாத இளைஞர்கள் தேவை” என்று விளம்பரம் கொடுத்தார். அந்த விளம்பரத்தை பார்த்து பல இளைஞர்கள் அந்த பங்களாவிற்கு ஆராய்ச்சியில் உதவி செய்ய படையெடுத்தனர்.

அவ்வாறு ஆவி ஆராய்ச்சியாளரின் உதவியாளர் ஒருவர் ஓஜோ போர்டு போன்ற ஒரு விளையாட்டை விளையாடி கன்னியாஸ்திரியின் ஆவியை அழைத்துப்பேசினார். அந்த ஆவி கொடுத்த குறிப்புகளின்படி அந்த ஆவி சொல்ல வந்த விஷயம் இதுதான்…

“மேரி லேரி என்பது என்னுடைய பெயர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி நான். எனது கணவரை மணந்துகொண்டு இங்கு வந்துவிட்டேன். ஆனால் 1667ல் என் கணவர் என்னை கொன்றுவிட்டார். என்னுடைய இறுதிச்சடங்கு முறையாக நடைபெறவில்லை. அதனை செய்துவிட்டால் என் ஆன்மா சாந்தியடைந்துவிடும்” என்று அந்த கன்னியாஸ்திரி ஆவி கூறியிருக்கிறது.

1939 ஆம் ஆண்டு கிரெக்சன் என்பவர் அந்த பங்களாவை விலைக்கு வாங்கி குடியேறினார். பேய் பங்களா என்று தெரிந்துதான் அதனை விலைக்கு வாங்கினார். ஒரு நாள் விளக்கு தானாக விழுந்து அந்த பங்களாவில் தீ பிடித்திருக்கிறது. ஆனால் ஆள் எஸ்கேப். எனினும் தீ எரியும்போது அந்த கன்னியாஸ்திரியின் உருவமும் சேர்ந்து எரிந்ததாக கூறியிருக்கிறார்.

அதன் பின் அந்த எரிந்த இடத்தை தோண்டியபோது சில எழும்புகள் கிடைத்ததாம். இது அந்த கன்னியாஸ்திரியின் எழும்புகளாகதான் இருக்கும் என்று யூகித்த ஹாரி பிரைஸ் அந்த எழும்புகளை முறையான மரியாதையோடு புதைக்க ஏற்பாடு செய்தாராம். அதன் பின் அந்த பங்களா 1944 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டதாம். அந்த பங்களாவை இடிக்க வந்த தொழிலாளர்களின் மேல் அந்த ஆவி கல்லை விட்டு எறிந்ததாக கூறப்படுகிறது. இந்த பங்களாவை குறித்து ஆவி ஆராய்ச்சியாளர் ஹாரி பிரைஸ் இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.