உடல் எடையை குறைக்க உதவும் ப்ளாக் காபி… ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்க வேண்டும்?.. இதோ உங்களுக்கான டிப்ஸ்…!

By Nanthini on புரட்டாதி 18, 2025

Spread the love

உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருக்கும் பலருக்கும் பிளாக் காபி ஒரு சிறந்த நண்பன் என்று தான் சொல்ல வேண்டும். பால், சர்க்கரை அல்லது கிரீம் எதுவும் சேர்க்காமல் தயாரிக்கப்படும் பிளாக் காபி வெறும் புத்துணர்ச்சி தரும் பானமாக மட்டுமல்லாமல் எடை குறைப்புக்கும் உதவக்கூடியது. இதில் உள்ள மிக முக்கியமான பொருள் காபின். இது நம் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டி வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். வளர்ச்சிதை மாற்றம் என்பது நாம் உட்கொள்ளும் உணவை ஆற்றலாக மாற்றும் செயல்முறை.

இந்த விகிதம் அதிகரிக்கும் போது நம் உடல் ஓய்வில் இருக்கும் போதும் அதிக கலோரிகளை எரிகின்றது. ஒரு நாளைக்கு 100 மில்லி கிராம் Caffeine எடுத்துக் கொள்வது ஓய்வு நேரத்தில் எரிக்கப்படும் கலோரிகளின் அளவை 11% வரை அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது கொழுப்பு செல்களில் இருந்து கொழுப்பை உடைத்து ரத்த ஓட்டத்தில் விடுவிக்க உதவும். கொழுப்பு செல்களில் இருந்து விடுவிக்கப்பட்ட கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்க பயன்படுத்தப்படுகின்றன. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பிளாக்காபி அருந்துவது உடல் கொழுப்பை வேகமாக ஆற்றலாக பயன்படுத்த ஊக்குவிக்கும்.

   

மேலும் பசி உணர்வை குறைக்கவும் உதவும். நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதோடு அதிகமாக சாப்பிடும் பழக்கத்தையும் குறைக்கும். காபியில் உள்ள ஊட்டச்சத்துக்களும் சில ஹார்மோன்களை தூண்டுவதும் இந்த பசியை கட்டுப்படுத்தும் விளைவுக்கு காரணமாக இருக்கலாம். ஒரு கப் பிளாக் காபியில் வெறும் இரண்டு கலோரிகள் மட்டுமே உள்ளது. ஆனால் அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படும் போது கலோரி மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும். எனவே உடல் எடையை குறைப்பதற்கு காபி அருந்து போது அதில் எந்தவிதமான கூடுதல் பொருட்களையும் சேர்க்கக்கூடாது.

   

ஆரோக்கியமான செரிமான அமைப்பு, நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு இது பயன்படும். பிளாக் காபி உடல் எடை குறைப்புக்கு உதவும் என்றாலும் அது மட்டுமே போதுமானது அல்ல. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் சீரான உடற்பயிற்சி அவசியமாகும். அதிகமாக காபி அருந்துவது தூக்கமின்மை, பதட்டம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு கப் மேல் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.