தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா சென்னையில் இன்று இதனை வெளியிட்டார். ஏற்கனவே திமுகவின் ரூ.8,000 கூப்பன் மற்றும் அதிமுகவின் வீட்டுக்கு வீடு பிரிட்ஜ் போன்ற வாக்குறுதிகள் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், பாஜகவின் இந்த அறிக்கை புதிய அரசியல் அலைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதிச் சடங்கிற்காக ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பு சமூக வலைதளங்களில் ஆதரவு மற்றும் கடும் விமர்சனம் என இரண்டையும் ஒருசேர பெற்றுள்ளது.
பெண்கள் மற்றும் குடும்பத் தலைவிகளை மையப்படுத்தி பல்வேறு அதிரடி சலுகைகளை பாஜக முன்வைத்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை, ஒருமுறை வழங்கப்படும் ரூ.10,000 நிதியுதவி மற்றும் ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்கள் (பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி) போன்றவை இதில் அடங்கும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘ஜீரோ-எப்ஐஆர்’ முறை, விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 100% சிசிடிவி கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன் மற்றும் அரசு கொள்முதலில் 20% இட ஒதுக்கீடு ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.
தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சனையான போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, தனி போதைப்பொருள் ஒழிப்புத் துறை மற்றும் கடல்வழி கடத்தலைத் தடுக்க பிரத்யேக புலனாய்வுப் பிரிவு அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மரண தண்டனை வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கடுமையான அறிவிப்பும் இதில் இடம்பெற்றுள்ளது. ஆன்மீக ரீதியாக, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடரப்படும் மற்றும் தைப்பூசம் மாநில விழாவாக அறிவிக்கப்படும் என இந்துத்துவ வாக்கு வங்கியை ஈர்க்கும் முயற்சிகளும் அறிக்கையில் தென்படுகின்றன.
இருப்பினும், இறுதிச் சடங்கிற்கான ரூ.10,000 நிதியுதவி என்ற அறிவிப்புதான் இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வேலையின்மை போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை விட, இறந்த பிறகு பணம் தருவதாகக் கூறுவது மக்களைக் கேலி செய்வது போல் இருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். “மக்கள் உயிர் வாழ வழி செய்யச் சொன்னால், அடக்கம் செய்யப் பணம் தருகிறோம் என்பது முறையா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரம், ஏழை எளிய மக்களின் கடைசி நேரத் தேவையை உணர்ந்து இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதாக பாஜக தரப்பு விளக்கமளித்துள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து முற்றிலும் விலகி 'வீ தி லீடர்'…
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள்…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்கு நகரத் தொடங்கியுள்ளனர்.…
தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, திமுகவின் அடிமட்டத் தூண்களாகக் கருதப்படும் ஒன்றியச் செயலாளர்கள்…
மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உடற்கல்வி வகுப்புகளைக்…
மேற்கு வங்க சட்டப்பேரவையைத் தொடர்ந்து, டெல்லி நாடாளுமன்ற லோக்சபாவிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது கடுமையான பிளவைச் சந்தித்து அரசியல்…