“3 பெண்களுடன் தொடர்பு… பிளாக்மெயில் செய்த எப்ஸ்டீன்”.. மௌனம் கலைத்த பில் கேட்ஸ்…. அமெரிக்காவை உலுக்கும் நாடாளுமன்ற விசாரணை…!

By Nanthini on ஆனி 24, 2026

Spread the love

அமெரிக்க நாடாளுமன்றக் குழு நடத்திய விசாரணையின்போது, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனக்கு மூன்று பெண்களுடன் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மறைந்த சர்ச்சைக்குரிய பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கூட்டாளிகள் மற்றும் அவரது நெட்வொர்க் குறித்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வை குழு விசாரணை நடத்தி வருகிறது. 2019ஆம் ஆண்டு சிறையில் மரணமடைந்த எப்ஸ்டீனுக்கும், பில் கேட்ஸுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து சமீபத்தில் கூடுதல் ஆவணங்கள் வெளியான நிலையில், கடந்த ஜூன் 10 அன்று பில் கேட்ஸிடம் இந்த அதிரடி விசாரணை நடத்தப்பட்டது.

நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜரான பில் கேட்ஸ், ரஷ்யாவைச் சேர்ந்த பிரிட்ஜ் விளையாட்டு வீராங்கனை மிலா ஆண்டனோவா, அணுசக்தி ஆய்வாளர் கரிமா நிக்மதுலினா மற்றும் மருத்துவத் தொழிலதிபரான ஆலிஸ் ஜேக்கப்ஸ் நெசெல்ரோட் ஆகிய மூன்று பெண்களுடன் தனக்குத் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டார். இந்த விவகாரங்களை எப்படியோ தெரிந்துகொண்ட எப்ஸ்டீன், தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளையும் பல பொய்களையும் சேர்த்து தன்னை மிரட்டவும், தனக்கு அழுத்தம் கொடுக்கவும் திட்டமிட்டிருந்ததாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

   

மேலும் தனது வாக்குமூலத்தில், “எப்ஸ்டீனின் குற்றங்களில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அவருடன் தொடர்பு வைத்திருந்ததே எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. எனது தொண்டு நிறுவனத்தின் பணிகளுக்கு மற்ற பெரும் பணக்காரர்களைத் தொடர்பு கொள்ள உதவுவதாகக் கூறியதால் மட்டுமே அவரைச் சந்தித்தேன்” என்று பில் கேட்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார். எப்ஸ்டீன் தன்னை நேரடியாக மிரட்டவில்லை என்றாலும், அவரது மெயில்களைப் பார்க்கும்போது தன்னை பிளாக்மெயில் செய்யத் திட்டமிட்டிருந்தது தெளிவாகத் தெரிவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

   

அதே சமயம், பில் கேட்ஸிற்கு பாலியல் நோய்கள் இருந்ததாக எப்ஸ்டீனின் ஆவணங்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். 2008இல் எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் கூட, பில் கேட்ஸ் அவரை சுமார் 12 முதல் 14 முறை நேரில் சந்தித்தது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நூற்றுக்கணக்கான மைனர் சிறுமிகளைத் தனது தீவிற்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்த எப்ஸ்டீனின் பாலியல் வலையில், உலகின் பல செல்வாக்குமிக்க பிரபலங்கள் சிக்கியிருப்பது இந்த விசாரணையின் மூலம் மீண்டும் அம்பலமாகியுள்ளது.