“விஜய் தம்பி சேற்றில் கால் வைத்தாரா?.. மண் சோறு சாப்பிட வைத்தாரா?”… ஆர்.பி.உதயகுமார் வெடிச்சிரிப்புப் பேச்சு…. வெடித்தது சர்ச்சை…!

By Nanthini on ஆனி 24, 2026

Spread the love

தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள், விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பாக கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அதற்கு மாறாக அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். மண்ணை ஆள வைத்த விவசாயிகளை இன்றைக்கு மண் சோறு சாப்பிட வைத்த பெருமை இந்த அரசே சாரும் என்றும் அவர் சாடினார்.

   

ஆரம்பத்தில் ஒரு லட்ச ரூபாய் கடன் பெற்றவர்களுக்கு வெறும் 5,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், மொத்தமாக 5,932 கோடி மதிப்பிலான கடன்கள் மட்டுமே தள்ளுபடி ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த 5,000 ரூபாய் என்பது கடனுக்கான வட்டிக்குக் கூட உதவாது என்பது ஒரு குழந்தைக்குக் கூட தெரியும் என்று குறிப்பிட்ட உதயகுமார், இதற்கெதிரான தொடர் எதிர்ப்புகளுக்குப் பிறகே தள்ளுபடித் தொகை 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது என்றார். இருப்பினும், தற்போது கூட்டுறவு நிறுவன ஊழியர்கள் மற்றும் முன்னாள் நிர்வாகக் குழுவினர் இதில் பயன்பெறக் கூடாது எனப் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது விவசாயிகளை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

   

திரைப்படங்களில் விவசாயிகளைப் பற்றிப் பெருமையாகப் பேசிவிட்டு, தற்போது நிஜ வாழ்க்கையில் விவசாயிகளின் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் விவசாயியாகப் பிறக்க வேண்டும்” என்றும், “விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்றும் வசனம் பேசிய விஜய் தம்பி, தற்போது விவசாயிகள் அரைகுறை ஆடையுடன் போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பது நியாயமா என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

 

ஆட்சிப் பொறுப்பேற்று 40 நாட்களேயான ஒரு புதிய அரசை முழுமையாக மதிப்பீடு செய்வது முறையான அரசியல் அல்ல என்றாலும், இந்த குறுகிய காலத்திற்குள் அரசு எடுத்துள்ள அணுகுமுறைகள் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையே தந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ததைச் சுட்டிக்காட்டிய அவர், “மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஏமாற்றத்தையே தந்துள்ளார்கள்; தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல” என்று கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் விஜய் தம்பி கிணற்றில் போட்ட கல்லாக அமைதி காப்பாரா அல்லது வாய் திறந்து விவசாயிகளுக்குப் பதில் அளிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.