தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அப்படிதான் அவர் தன்னுடைய கிழக்கே போகும் ரயில் படத்துக்கே பொருத்தமாக இருப்பார் என்று சுதாகரைத் தேர்வு செய்துள்ளார். அதற்கு முன்னர் அந்த படத்தில் நடிக்க சிரஞ்சீவி கூட ஆடிஷனுக்கு வந்தாராம்.
ஆனால் சிரஞ்சீவியை விட சுதாகர் அந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருந்தார் என்பதால் அவரையே தேர்வு செய்துள்ளார். அதுபற்றி பேசியுள்ள பாரதிராஜா “சிரஞ்சீவி வந்தான். ஆனால் சுதாகர் என்னை ஏமாற்றி விட்டான். அவனிடம் வேட்டியைக் கொடுத்து பாண்டி பஜாரில் நடக்க விட்டேன். பொருத்தமாக இருந்தான்.
அந்த படம் எடுத்து முடித்ததும் பலரும் இந்த படம் ஓடாது என்றார்கள். தயாரிப்பாளர் “என்னை மீண்டும் பொள்ளாச்சிக்கே அனுப்ப முடிவு செய்து இந்த படத்தை எடுத்தாயா” எனக் கேட்டார். இளையராஜா என்னிடம் “என்னய்யா இந்த படத்துல நிறைய சைலண்ட் ஷாட் இருக்கு, அதுக்கு நான் ம்யூசிக் போட்டுடுவேன். ஆனா க்ளைமேக்ஸ் எடுபடுமா, இந்த படம் ஓடுமா?” என்று கேட்டார்.
இதையெல்லாம் கேட்டு நான் பயந்துவிட்டேன். என் வீட்டுக்கு சென்று தேம்பி தேம்பி அழுதேன். ஆனால் படம் ரிலீஸாகி இரண்டாம் நாளில் கூட்டம் வர ஆரம்பித்தது. நான் போய் படம் பார்த்தேன். அப்போது ஒருத்தன் சொன்னான் “பாரதிராஜா, பாரதிராஜாதாண்டா” என. அப்போதே அந்த படம் ஹிட் என நான் முடிவு செய்தேன்” என மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
