தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் திமுக எனும் கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து வந்த நிலையில் அப்போது அதன் பிரதிநிதியாக தன்னை இணைத்துக் கொண்ட எம் ஜி ஆர், அந்த கட்சியின் பிரச்சாகராக சினிமாவில் தன்னை முன்னிறுத்தினார். கட்சியின் வளர்ச்சிக்கு எம் ஜி ஆரும், எம்ஜி ஆரின் பிரபலத்துக்கு திமுகவும், அதன் தொண்டர் படையும் உதவினர்.
ஆனால் திமுகவின் பொதுச்செயலாளர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் எம் ஜி ஆருக்கு சில பிணக்குகள் ஏற்படத் தொடங்கின. இதையடுத்து 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அது அவர் சினிமா வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற கேள்வி இருந்தது.
அப்போதுதான் அவர் அவர் இயக்கி தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ரிலீஸூக்குத் தயாரானது. ஆனால் அந்த பட ரிலீஸுக்கு அப்போதைய ஆளுங்கட்சியிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்துள்ளன. அதன் உச்சகட்டமாக படத்துக்கு போஸ்டர் கூட ஒட்ட முடியாத அளவுக்கு பிரச்சனகள் வந்துள்ளன. அதனால் சிங்கப்பூரில் இருந்து ஸ்டிக்கர்களை வரவழைத்துள்ளார் எம் ஜி ஆர்.
அதே போல ஊடகங்களிலும் அந்த படத்துக்கு எதிர்மறையான விமர்சனம்தான் இருந்தது. அப்போது பிரபலமாக இருந்த பத்திரிக்கையாளரான எம் ஜி வல்லபன் “இந்த படம் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டும் என்றே உருவாக்கப்படுகிறது. அதனால் இந்த படம் ரசிகர்களுக்குப் பிடிக்க வாய்ப்பில்லை” என்று எழுதியிருந்தார். இதை நினைவில் வைத்திருந்த எம் ஜி ஆர் படம் ரிலீசானதும் அவருக்கு ப்ரிவியூ ஷோ போட்டுக் காட்டியுள்ளார்.
படத்தைப் பார்த்த எம் ஜி வல்லபன் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டாராம். படம் சிறப்பாக வந்திருப்பதாக எம் ஜி ஆரை பாராட்டியுள்ளார். மேலும் படம் குறித்த பாசிட்டிவ்வான விமர்சனத்தையே பத்திரிக்கையிலும் எழுதியுள்ளார்.