தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அதற்குக் காரணம் முன்னணி நடிகர்களை போட்டால் அவர்களை வைத்து நாம் எடுக்க நினைத்ததை எடுக்க முடியாது என அவர் நம்பியதே அதற்கு காரணம். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா, பிரியா மணி, வடிவுக்கரசி உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.
ஆனால் அவர் படத்தில் அறிமுகமாகியும் பெரிதாக ஜொலிக்காத நடிகர்களும் சிலர் இருந்தார்கள் என்பதுதான் தவிர்க்க முடியாத உண்மை. அப்படி ஒரு பட்டியல் போட்டால் அதில் முதல் இடம் பிடிப்பவர் அவரின் மகன் மனோஜ்தான். தாஜ்மஹால் படத்தில் பிரம்மாண்டமாக அறிமுகமானார் மனோஜ். ஆனால் அவரால் ஹீரோவாக மட்டுமில்லாமல் ஒரு குணச்சித்திர நடிகராகக் கூட நிலைத்து நிற்க முடியவில்லை.
அது போல கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுதாகரும், தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. தெலுங்கு சினிமாவிலும் அவரால் ஒரு நகைச்சுவை நடிகராகதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது.
அதுபோல மண்வாசனை பாண்டியன், முதல் மரியாதை தீபன், கடலோரக் கவிதைகள் ராஜா மற்றும் கண்களால் கைது செய் வசீகரன் போன்றோரும் பெரியளவில் நடிகர்களாக ஜொலிக்க முடியவில்லை. இதில் பாண்டியன் ஹீரோவாக இல்லாவிட்டாலும் குணச்சித்திர நடிகராக வில்லனாக என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மற்றவர்களுக்கு அதுபோன்ற வாய்ப்புக் கூட அமையவில்லை.