கார்த்திகை மாதம் என்றாலே தீபங்களுக்கு சிறப்பான மாதம் தான். இந்த மாதத்தில் கோவில்களும் சரி வீடுகளும் சரி தீப ஒளியால் ஜொலிக்கும். பல வித விதமான விளக்குகளை கடவுள்களுக்கு ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்வர் பக்தர்கள். கடவுள்களுக்கு ஏற்றப்படும் விளக்கானது பல வகையில் இருக்கிறது. வெள்ளி விளக்கு பித்தளை விளக்கு ஐம்பொன் செம்பு அகல் விளக்கு என பல வகையில் இருக்கிறது. இதில் விலை மலிவானது மற்றும் அதீத சிறப்புகளைக் கொண்டதுதான் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு. இதன் சிறப்புகள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

எல்லா கடவுள்களுக்கும் தீபம் ஏற்றும் போது அகல் விளக்கினால் தீபம் ஏற்றுவதே சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் தெய்வங்களுக்கு அகல் விளக்கு தான் மிகவும் பிடிக்கும். ஏழை ஒருவரால் ஐம்பூதங்கள் ஆன மண் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுவது தான் இந்த அகல் விளக்கு. ஐம்பூதங்களும் இதில் அடங்கி இருப்பதால் இந்த அகல் விளக்கு மகத்துவமானதாக பார்க்கப்படுகிறது.
களிமண்ணை எடுத்து அதில் நீரை ஊற்றி வடிவம் செய்து சூரிய ஒளியில் காயவைத்து காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கை ஏழையானவன் செய்கிறான். நாம் அகல் விளக்கை வாங்கும்போது அந்த ஏழையின் குடும்பமும் பிழைக்கிறது. இதில் இரண்டு காரணங்களும் அடங்கி இருக்கிறது. அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாளும் விரும்புகிறாள்.

அகல் விளக்கை வாங்கிக் கொண்டு வந்து புதிய அகல் விளக்கை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற விட்டு பிறகு காய வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றும் போது பஞ்சபூதங்களையும் வைத்து நாம் வழிபாடு செய்வதற்கு அது அர்த்தமாகும். அகல் விளக்கின் கீழே எண்ணெய் கசியும் என்பதால் பலர் இந்த விளக்கை விரும்ப மாட்டார்கள். ஆனால் இதன் மகத்துவம் தெரிந்து இனிமேல் கடவுளுக்கு பிடித்தமான அகல் விளக்கை ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
