நான் இயக்கிய நடிகைகளிலேயே சில்க்தான் பேரழகி… அவர் அருகில் கூட வெள்ளைக் கதாநாயகிகள் வர முடியாது- பொது மேடையில் அறிவித்த பாலு மகேந்திரா!

By vinoth on ஜூலை 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.

இவர் படங்களில் கதாநாயகிகளை மிகவும் அழகாகவும் தனித்துவமாகவும் காட்டுவார். பெரும்பாலும் அவர் படங்களில் திராவிட முகம் கொண்ட நடிகைகளைதான் நடிக்க வைப்பார். அப்போதைய பொதுப்புத்தியில் கதாநாயகியாக ஏற்றுக் கொள்ள முடியாத அர்ச்சனா, மௌனிகா, ஈஸ்வரி ராவ், பிரியா மணி போன்ற கருப்பு தோல் கொண்ட பெண்களையே அவர் தன்னுடைய படங்களில் கதாநாயகிகளாக்கினார். அவர்களும் தங்கள் நடிப்புத் திறனால் வெற்றிகரமான நடிகைகளாக வலம் வந்தனர்.

   

அதே போல அவர் இயக்கத்தில் சில்க் ஸ்மிதா சில படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினாகவும், நீங்கள் கேட்டவை படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் பாலு மகேந்திரா மறைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவியின் நீயா நானா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

   

அப்போது அவரிடம் “நீங்கள் இயக்கியதில் உங்களைக் கவர்ந்த கருப்பு நிறம் கொண்ட நடிகை யார்?” என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு அவர் “நான் சில்க் ஸ்மிதாவைதான் சொல்வேன். நான் அர்ச்சனா, சில்க் ஸ்மிதா மற்றும் மௌனிகா ஆகியோரை இயக்கியுள்ளேன். அதில் சில்க் ஸ்மிதாவைதான் stunningly beautiful என்று சொல்வேன்.

 

அவரின் கண்களும், மூக்கும், பாம்பு போன்ற உடல்வாகும் மூன்றாம் பிறை படத்தில் கமல்ஹாசனோடு பொன்மேனி உருகுதே பாடலில் அவரின் ஈர்ப்பும் வெள்ளை நிற தோல் கொண்ட அழகிகளால் பண்ண முடியாது. அவர்களால் சில்க்கின் பக்கத்தில் கூட வரமுடியாது” எனக் கூறியுள்ளார்.