கொழும்பில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான உயர் அழுத்தப் போட்டியில், பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அந்நாட்டு ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணி பவர்பிளேயிலேயே 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, பாபர் அசாம் அணியை மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்ஷர் படேல் வீசிய 5-வது ஓவரில் வெறும் 7 ரன்களுக்கு (5 பந்துகள்) அவர் விக்கெட்டை பறிகொடுத்தது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மோசமான ஆட்டத்தால் பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாபர் அசாமை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு வீரரிடமிருந்து இவ்வளவு மோசமான ஷாட் தேர்வை எதிர்பார்க்கவில்லை; போராடும் குணமே அவரிடம் இல்லை” என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய இலக்கை துரத்திய வேளையில், பொறுப்பின்றி ஆட்டமிழந்த பாபர் அசாம், இந்த டி20 அணியில் தொடர தகுதியற்றவர் என்றும் பலமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
