இதுல எல்லாம் நீங்க தலையிடாதீங்க… எம்.ஜி.ஆரை எதிர்த்து துணிந்து பேசிய ஒரே இயக்குனர்..

By vinoth

Updated on:

சிவாஜி கணேசன் நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் பி.ஆர்.பந்தலு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இவர், ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்கினால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கலாம் என்று அவரை சந்தித்து கால்ஷீட் கேட்டுள்ளார். அப்போது அவர் சொன்ன கதைதான் ஆயிரத்தில் ஒருவன். அந்த கதையைக் கேட்ட எம் ஜி ஆர், அந்த படத்தில் நடிக்க சம்மதமும் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார். நாகேஷ், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். படத்தில் 4 பாடல்களை கவிஞர் வாலியும், 3 பாடல்களை கவியரசர் கண்ணதாசனும் எழுதியிருந்தனர். படமும் அதில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் ஆயிரத்தில் ஒருவன் முக்கிய படமாக அமைந்தது.

   

வழக்கமாக எம் ஜி ஆர் தன்னுடைய படங்களின் பாடல்களை தான்தான் உறுதி செய்வார். பாடலை யார் எழுத வேண்டும், யார் பாட வேண்டும் என்பதையெல்லாம் அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வார். அதற்கு உடன்படும் நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்களுக்குதான் படம் கொடுப்பார்.

மற்ற படங்களை போலவே இந்த படங்களின் பாடல்களையும் தான் தேர்வு செய்ய விரும்பிய எம்.ஜி.ஆர் அதற்கான முயற்சி செய்தபோது கோபமான இயக்குனர் பந்தலு “என்ன நீங்க பாடல்களில் எல்லாம் தலையிடுறீங்க, இதெல்லாம் நீங்கள் செய்ய கூடாது. நான் ஒன்றும் அனுபவம் இல்லாத ஒரு இசையமைப்பாளரை படத்திற்கு இசையமைக்க தேர்வு செய்யவில்லை. அனுபவம் உள்ளவரைத்தான் போட்டிருக்கிறேன். நானும் ஒன்றும் அனுபவம் இல்லாத இயக்குனர் இல்லை. அதனால் நீங்கள் நடிப்பதை மட்டும் கவனியுங்கள். இதில் நீங்கள் தலையிட வேண்டாம்” என்று எம்.ஜி.ஆரிடம் நேருக்கு நேராக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியவர்களில் ஒருவரான எம் எஸ் விஸ்வநாதன் ஒர் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.  இதுபற்றி அவர் “தான் இயக்கும் மற்றும் தயாரிக்கும் படங்களின் அனைத்து முடிவுகளும் தன்னால் எடுக்கப்படவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் தான் பி.ஆர்.பந்தலு” என்று எம்.எஸ்.விஸ்வாநாதன் கூறியுள்ளார்.