புது வருடம் பிறந்த பிறகு முதல் முதலாக கொண்டாடப்படும் பண்டிகை தைத்திருநாள் பொங்கல் பண்டிகை ஆகும். அன்றைய தினம் பச்சரிசி பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்குவது வழக்கம். அதற்கு அடுத்ததாக பொங்கலுக்கு விசேஷமாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை ஏறு தழுவல், மஞ்சுவிரட்டு என்றும் கூறுவர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு ஒன்றாகும்.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு என்ற ஊர்களில் ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக நடைபெறும். மேலும் திருப்பூர், நாமக்கல், அலங்காநத்தம், சேலம் போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
இந்த ஜல்லிக்கட்டு மிகவும் ஆபத்தான ஒரு விளையாட்டு மாடுகளையும் அச்சுறுத்த கூடாது என்று பல தடைகள் ஏற்பட்டாலும் கூட இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்கின்றனர். ஆனால் இந்த வருடம் துரதிஷ்டவசமாக இரண்டு நாட்களுக்கு முன்பு பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வீரர் நவீன் மாடு முட்டி காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதில் 19 காளைகளை அடக்கி கார் பரிசு பெற்ற மாடுபிடி வீரர் கார்த்தி என்பவர் அரசுக்கு ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் மாடுபிடி வீரர்களுக்கும் இன்சூரன்ஸ் வேண்டும். அதே போல் இறந்து போன மாடு பிடி வீரர் நவீன் குடும்பத்திற்கு இழப்பீடு ஏதாவது கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
