குருகிராமில், கிழிந்த ரூ. 10 நோட்டை ஏற்க மறுத்த ஆட்டோ டிரைவர் (19), பலரால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரணமடைந்தவர், உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த விபின், சில நாட்களுக்கு முன் குரு கிராமில் தங்கி, வாடகை ஆட்டோ ஒன்றை ஓட்டி வந்துள்ளார்.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி, மதியம் 2 மணியளவில், 2 பயணிகள் விபின் ஆட்டோவில் இருந்து இறங்கி, கட்டணம் செலுத்தும் பொழுது, கிழிந்த ரூ. 10 நோட்டை கொடுத்துள்ளனர். அதனை ஏற்க மறுத்த விபின் வேறு நோட்டை கொடுக்குமாறு கூறினார். பிடிவாதமாக அதே நோட்டையே கொடுக்க முயன்ற பயணிகளுக்கும், விபீனிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. பின்பு அந்தப் பயணிகள், தங்கள் நண்பர்களை அழைத்தனர். உடனே மூவர் அங்கு வந்து, இரும்பு பொருட்களைக் கொண்டு விபீனை பலமாக தாக்கினர். கடுமையான தலைவெட்டு மற்றும் உள் காயங்களால் மயங்கி விழுந்த விபின், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின் அவர் குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்து வந்த நிலையில், சனிக்கிழமை (16.8.25) அதிகாலை விபின் உயிரிழந்தார்.
சம்பவம் அறிந்து போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது, விபின் மீது நடக்கும் தாக்குதலைக் கண்டு உறவினர்கள் தடுக்க முயன்ற போது, குற்றவாளிகள் அவர்களையும் தாக்கி, தப்பி சென்றனர். மேலும் முக்கிய குற்றவாளிகள், ராம் விஷால் துபே (19), லக்ஷ்மண் குமார் (24), ஆகஸ்ட் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற மூன்று குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். முதலில் இந்த வழக்கு தாக்குதல் மற்றும் கலவரம் வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், விபின் உயிரிழந்ததற்கு பின் கொலை குற்றமாக மாற்றப்பட்டது.
