உங்க போனிலேயே இருக்கும் ‘Kill Switch’… இனி UPI-ல் பணம் அனுப்பினால் உடனே போகாது… RBI கொண்டுவரும் அதிரடி மாற்றம்…!

By Nanthini on சித்திரை 10, 2026

Spread the love

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அதே வேளையில், ஆன்லைன் மோசடிகளும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இதனைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது புதிய கட்டுப்பாடுகளை முன்மொழிந்துள்ளது. குறிப்பாக, யுபிஐ (UPI) அல்லது ஐஎம்பிஎஸ் (IMPS) மூலம் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பும்போது, ஒரு மணிநேர ‘கூலிங் பீரியட்’ (Cooling Period) முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த கால இடைவெளியில், பணத்தை அனுப்பியவர் தனது பரிவர்த்தனையை மீண்டும் சரிபார்க்கவும், ஏதேனும் தவறு அல்லது சந்தேகம் இருந்தால் உடனடியாக அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டில் ஆன்லைன் மோசடிகள் சுமார் 22,000 கோடி ரூபாயைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகின்றன. சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களை ஆசை காட்டியோ அல்லது மிரட்டியோ மேற்கொள்ளப்படும் ‘சோஷியல் இன்ஜினியரிங்’ மோசடிகளைத் தடுக்க இந்த கால அவகாசம் ஒரு கேடயமாகச் செயல்படும். இருப்பினும், பொதுமக்களின் அன்றாடத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கடைகளில் ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதற்கும், ஏற்கனவே நம்பிக்கைக்குரிய பட்டியலில் (Trusted Beneficiaries) உள்ளவர்களுக்குப் பணம் அனுப்புவதற்கும் இந்த ஒரு மணிநேரக் கட்டுப்பாடு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

முதியவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நோக்கில், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால், அவர்களின் நம்பிக்கைக்குரிய ஒருவரின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட உள்ளது. மேலும், ஏதேனும் அவசர காலங்களில் அல்லது மோசடி நடப்பதாக உணரும்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஒரே கிளிக்கில் முடக்கும் ‘கில் ஸ்விட்ச்’ (Kill Switch) வசதியையும் கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து பாதுகாப்பையும் பலப்படுத்துவதன் மூலம், சாமானிய மக்களின் கடின உழைப்பில் ஈட்டிய பணத்தை டிஜிட்டல் கொள்ளையர்களிடமிருந்து காக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.