விஜய் கட்சி எம்.எல்.ஏ-விடம் பேசியது யார்?…. 35 கோடி டூ 50 கோடி.. தமிழக அரசியலை உலுக்கும் குதிரை பேர விபரம்… பரபரப்பு வாக்குமூலம்….!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க தீவிர முயற்சி நடைபெற்று வருவதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம், தவெக ஆட்சிக்கு எதிராக செயல்பட ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தவெக-விற்கு எதிராக வாக்களிக்க வைக்க, ஒவ்வொரு எம்.எல்.ஏ-விற்கும் ரூ.35 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குதிரை பேர வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உட்பட 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேசன் (41) என்பவர் 12-வது நபராகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான கணேசன் அளித்த வாக்குமூலத்தின்படி, தவெக-வில் இணைய விரும்புவதாகக் கூறிக்கொண்டு மதுரையில் வைத்து உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ-வை அவர் சந்தித்து பேரம் பேச முயன்றது தெரியவந்துள்ளது. திருநாவுக்கரசு என்பவர் மூலமாக இந்த பேரம் பேசப்பட்டதும், அது தொடர்பான ஆடியோ ஆதாரங்கள் போலீசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையிலுமே கணேசன் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

மறுபுறம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் இந்த பேரம் நடைபெற்றது என கைதான சிலர் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானதால், போலீசார் அவர்களை தேடி வந்தனர். இதற்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசியதாகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) தங்களது பெயர்கள் இல்லாத பட்சத்தில், எதன் அடிப்படையில் தங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்று கேள்வி எழுப்ப விளக்கமளிக்குமாறு கோரியுள்ளார். செந்தில் பாலாஜியின் இந்த கடிதத்திற்கு சட்டரீதியாக எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து தற்பொழுது காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.