“அந்த குழந்தையே நான் தான் சார்”…. 19 வருஷத்துக்கு முன்னாடி மெஸ்ஸி கையில் இருந்த குழந்தை தான் இவரா?… கால்பந்து உலகையே உலுக்கிய அந்த ஒரு புகைப்படம்…!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

அட்லாண்டாவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி களம் காணவுள்ளது. ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை ‘ஸ்பெயின் vs அர்ஜென்டினா’ என்று பார்ப்பதை விட, ‘மெஸ்ஸி vs லமின் யமால்’ இடையிலான யுத்தமாகவே உற்று நோக்குகிறது. ‘இங்கிலிஷ்காரன்’ திரைப்படத்தில் சத்யராஜிடம் “அந்த குழந்தையே நீங்கதான் சார்” என்று கதை சொல்லும் பாணியில், மெஸ்ஸியின் கைகளில் அன்று தவழ்ந்த ஒரு குழந்தை இன்று அவருக்கு எதிராகவே உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடப் போகிறது என்ற சுவாரசியமான பின்னணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தற்போது ஸ்பெயின் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள 19 வயதான லமின் யமால், மெஸ்ஸியைப் போலவே பார்சிலோனா கால்பந்து கிளப்பால் அடையாளம் காணப்பட்டவர். தனது 15 வயதிலேயே பார்சிலோனா அணிக்காக அறிமுகமாகி சாதனை படைத்த யமால், மெஸ்ஸியைப் போன்றே ஒரு திறமையான இடது கால் ஆட்டக்காரர் ஆவார். பார்சிலோனா அணியில் மெஸ்ஸி அணிந்து விளையாடிய புகழ்பெற்ற ’10-ஆம் எண்’ ஜெர்சியை அவருக்குப் பின் அணிந்த வீரர்கள் பலரும் ஃபார்ம் அவுட் ஆகியோ அல்லது காயமடைந்தோ அவதிப்பட்ட நிலையில், அந்த ஜெர்சியை வாங்கிய யமால் தனது அசாத்திய ஆட்டத்தால் அணியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று ரசிகர்களின் மனதில் மெஸ்ஸியின் ஜூனியராக இடம்பிடித்தார்.

   

இந்த நிலையில், லமின் யமாலின் தந்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள ஒரு பழைய புகைப்படம் ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்பு, யுனிசெஃப் (UNICEF) காலண்டர் விளம்பரப் புகைப்படத்திற்காக இளம் வயது மெஸ்ஸி ஒரு பச்சிளம் குழந்தையைத் தொட்டிலிலும் தன் கைகளிலும் தூக்கி வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்களில் யமாலின் தாயாரும் உடன் இருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால், மெஸ்ஸியின் கைகளில் அன்று தவழ்ந்த அந்தப் பச்சிளம் குழந்தை தான் இன்று ஸ்பெயின் அணியைக் காக்கும் 19 வயது லமின் யமால்!

   

19 ஆண்டுகளுக்கு முன்பு விளம்பரத்திற்காக தற்செயலாகச் சந்தித்த இருவர், இன்று உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் எதிரெதிர் துருவங்களாக மோதிக்கொள்ளும் சூழலை காலம் உருவாக்கியுள்ளது. இதனை ‘விதியின் அற்புதம்’ என்று கால்பந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மெஸ்ஸியின் ஆசி பெற்ற அந்தப் பாலகன் உலகக்கோப்பையை வெல்வாரா அல்லது கால்பந்து உலகின் அசைக்க முடியாத ராஜாவான மெஸ்ஸி மீண்டும் தனது மகுடத்தைத் தக்கவைப்பாரா என்ற சுவாரசியமான விடைக்காக உலகமே ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.