தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 5,900 இடங்கள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுள்ள இந்தத் தேர்தலில், சுமூகமான வாக்குப் பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாக்குச்சாவடி மையங்களுக்குள் எந்தவொரு அரசியல் கட்சியின் அடையாளத்தையும் வெளிப்படுத்துவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் கட்சிச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட உடைகள், கரைவேட்டிகள், கட்சி கொடிகள் அல்லது அரசியல் தலைவர்களின் உருவம் பதித்த பேட்ஜ்கள் மற்றும் புகைப்படங்களை அணிந்து வர அனுமதி இல்லை. இத்தகைய அடையாளங்களுடன் வருவோர் வாக்குச்சாவடிக்குள் நுழையத் தடை விதிக்கப்படும். தேர்தல் நடுநிலைமையைப் பேணும் வகையில், மையத்திற்கு வெளியே கையேடுகள் வழங்குவதோ அல்லது சக வாக்காளர்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதிலும் தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் எடுத்து வரும் வாக்காளர்கள், அதனை அங்குள்ள அதிகாரிகளிடம் அணைக்கப்பட்ட (Switch Off) நிலையில் ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். வாக்கு செலுத்திய பிறகு டோக்கனை காண்பித்து போனைத் திரும்பப் பெறலாம். மேலும், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கேமராக்கள் கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது.
வாக்களிக்கும் ரகசியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, வாக்குச்சாவடிக்குள் புகைப்படம் எடுப்பதோ அல்லது வீடியோ எடுப்பதோ சட்டப்படி குற்றமாகும். மீறிச் செயல்படுபவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் இந்த நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி, எவ்வித இடையூறுமின்றித் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
