தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம மக்கள் தங்களின் அடிப்படை உரிமைக்காகவும், சமூக அங்கீகாரத்திற்காகவும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். அச்சம் தவிழ்ந்தான் கிராமத்திற்கு அருகிலேயே அமைந்திருந்தாலும், தலித் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் ‘பரச்சேரி’ என்ற பெயரிலேயே இக்கிராமம் அழைக்கப்பட்டு வருகிறது. அரசு ஆவணங்களிலும் இதே பெயர் நீடிப்பதால், இது தங்களைச் சமூக ரீதியாகப் பின்னுக்குத் தள்ளுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் கிராமத்தின் பெயரை ‘வடக்கு அச்சம் தவிழ்ந்தான்’ என மாற்றக் கோரி இம்மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்து வருகின்றனர். “தனிமனிதனைச் சாதிப் பெயர் சொல்லி அழைப்பது குற்றம் எனும் நாட்டில், ஒரு ஊரையே சாதிப் பெயரால் அடையாளப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?” என்று ஊர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சமூக நீதி பேசும் மண்ணில், ஒரு பெயரால் தங்கள் இருப்பு இழிவுபடுத்தப்படுவதை ஏற்க முடியாது என்பதே இவர்களின் ஒற்றைப் போராட்டக் குரலாக உள்ளது.
இந்தப் பெயர் மாற்றம் என்பது வெறும் உணர்வுப்பூர்வமான விஷயம் மட்டுமல்ல, அது அம்மக்களின் வாழ்வாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கின்றது. தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் பிரதீபா போன்ற படித்த இளைஞர்கள், தங்கள் முகவரியைக் குறிப்பிட்டதுமே வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படும் அவலநிலை நீடிக்கிறது. தகுதியும் மதிப்பெண்களும் இருந்தும், சாதிய அடையாளத்தைக் காட்டும் கிராமத்தின் பெயரால் தங்களுக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெயர் மாற்றம் மட்டுமின்றி, அடிப்படை வசதிகளிலும் இக்கிராமம் போதிய கவனம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. “எங்கள் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத அரசுக்கு எதற்கு வாக்களிக்க வேண்டும்?” என்ற ஆவேசத்துடன் கிராமத்தின் முக்கிய இடங்களில் பேனர்களை வைத்துள்ளனர். தமிழகமே வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்றுகொண்டிருக்கையில், சமூக நீதியையும் கண்ணியமான அடையாளத்தையும் வேண்டி ஒரு கிராமமே ஜனநாயகக் கடமையை மறுத்து நிற்பது அதிகார வர்க்கத்தின் கவனத்திற்கு உரியதாக மாறியுள்ளது.
