இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் சமீபகாலமாக அமானுஷ்யம் மற்றும் திகில் நிறைந்த வீடியோக்கள் ட்ரெண்ட்மிக்ஸ் ஆகி வருகின்றன. பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும், பலரின் விருப்பப்பட்டியலில் இத்தகைய வீடியோக்கள் முதலிடம் பிடிக்கின்றன. அந்த வரிசையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றுதான் சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு பாழடைந்த வீடு. பராமரிப்பின்றி, இருள் சூழ்ந்து, பார்ப்பதற்கே அச்சமூட்டும் வகையில் இருக்கும் இந்த வீட்டிற்குள் சில இளைஞர்கள் வீடியோ எடுப்பதற்காக சுவர் ஏறி குதித்தபோதுதான், 17 வருடங்களுக்கு முன்பு சென்னை நகரையே உலுக்கிய ஒரு கொடூர சம்பவத்தின் சாம்பல் மீண்டும் கிளறப்பட்டுள்ளது.
சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள கண்ணப்பர் தெருவில் அமைந்துள்ள அந்த வீடு, தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட்டின் (TAMIN) முன்னாள் நிர்வாக இயக்குநர் சரவணன் என்பவருக்குச் சொந்தமானதாகும். கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி, இந்த வீட்டின் உள்ளே சரவணன், அவரது மனைவியும் உள்துறை அமைச்சகத்தின் ஓய்வு பெற்ற துணைச் செயலாளருமான கஸ்தூரி மற்றும் அவர்களது பணிப்பெண் அன்பரசி ஆகிய மூன்று பேரும் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். கொலை நடந்த அன்று அந்த வீடு எவ்வளவு அலங்கோலமாக கலைந்து கிடந்ததோ, அதே நிலையிலேயே இன்றுவரை 17 வருடங்களாக எந்தவித பராமரிப்பும் இன்றி கேட்பாரற்று கிடக்கிறது.
மிகப்பெரிய செல்வாக்குமிக்க அதிகாரியாக இருந்த சரவணனின் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு புகுந்த கும்பல் தான் இந்த கொடூர கொலையை அரங்கேற்றியது. ஆரம்பத்தில் மர்மமாக இருந்த இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் தலையிட்டு எச்சரிக்கை விடுத்த பிறகே போலீஸ் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, இந்த கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். காலம் உருண்டோடினாலும், அந்த வீட்டில் உறைந்திருந்த மரண பயமும், பாழடைந்த தோற்றமும் இன்று சமூக வலைதள பக்கங்களில் ‘ஹாரர் கன்டென்ட்’ (Horror Content) தேடும் இளைஞர்களை காந்தம் போல் ஈர்த்துள்ளது.
தற்போது இந்த வீட்டின் வீடியோக்கள் வைரலாகி வருவதைத் தொடர்ந்து, யூடியூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்பவர்கள் பலரும் அத்துமீறி இந்த வீட்டுக்குள் நுழையத் தொடங்கியுள்ளனர். இதனால் சுதாரித்துக் கொண்ட காவல்துறை, “இதுபோன்ற தடைசெய்யப்பட்ட, பாழடைந்த வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது சட்டப்படி குற்றமாகும்; இது விசாரணையின் நோக்கத்தை சிதைப்பதுடன், அங்குள்ள தடயங்களை அழிக்கும் குற்றத்தின் கீழ் வரும்” என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. பொழுதுபோக்கிற்காக வீடியோ எடுக்கச் சென்ற இளைஞர்களால், 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிஜக் கொடூரத்தின் பின்னணி மீண்டும் மக்களின் பார்வைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
